கொட்டித் தீராததொரு பெருங்கோபத்துடன்
தறிகெட்டுத் திரிந்து கொண்டிருக்கும்' இந்த மழைக்கும்,
கத்தித்தீராததொரு பேரோலத்துடன் பிரபஞ்சத்தை
பிளந்து கொண்டிருக்கும் இந்த மின்னல் கீற்றுக்கும்
குடித்துத்தீராததொரு பெருந்தாகத்துடன் குளிரை
குடித்துக்கொண்டிருக்கும் இந்த கரும் இரவிற்கும்
ஆடித்தீராததொரு ஆனந்தத்துடன்
கூத்தாடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை நொடிக்கும்
பூட்டிய கதவிற்குப் பின்னும்
மூடிய போர்வைக்குள்ளும்
சுருண்டு கிடக்கும் என்னிடம்
என்ன இருக்கிறது
திருப்பிக் கொடுப்பதற்கு,
ஒரு கவிதையையும்
என் நிர்வாணத்தையும் தவிர?