தேடல்
https://good-d4ys.blogspot.com/2010/10/blog-post_02.htmlஆதியில் தோன்றிய மாபெரும் காடு ஒன்றை காத்துக்கொண்டிருக்கிறாள்
பச்சை நிறக் கண்களை உடைய குட்டி வன தேவதை ஒருத்தி.
இவளின் சொற்களைக் குடிக்கும் பட்டாம்பூச்சி ஒன்றையும்
இவளின் கோபம் தின்று வாழும் புலி ஒன்றையும்
வளர்த்து வந்தாள்.
ஒளியிழந்து கொண்டிருந்த நட்சத்திரங்களை களவாடி
ஒரு குடுவையில் பாதுகாத்து வைத்த இவள்
காலத்தை தின்று வாழ்ந்து வந்தாள்.
கனவுகளை தின்று வாழ்ந்தவர்கள் காட்டை வேட்டையாட வந்த போது
இவள் சிரித்த குதூகல சிரிப்பில்
அண்டமனைத்தும் அதிர்ந்து அடங்கியது ஒரு முறை.
திசைகளைப் பிளந்து கொண்டு கால பயத்தில் பதறி ஓடிய அவர்கள்
சிதறிப் போனார்கள் கண்ணீர்த்துளிகளாய்.
ஆனால் அவர்கள் சென்ற போது இவளின் கனவில் இருந்து
ஒற்றை நட்சத்திரத்தையும், ஒற்றை சொல்லையும் திருடி
சென்று விட்டார்கள்.
பெருங்காட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அந்த ஒற்றை நட்சத்திரத்தையும்
ஒற்றை சொல்லையும் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்கள் அந்த பட்டாம்பூச்சியும், புலியும்.
காத்திருந்து அலுத்து போன இவள்
காலத்தை சிறிது தெளித்து
மிச்சம் கிடந்த சொற்களையும் கோபத்தையும் வைத்து முடிவுறாத ஒரு இறுதிக் கவிதையை
நெய்து கொண்டிருக்கிறாள், தொலைத்த நட்சத்திரத்தையும், சொல்லையும் கண்டெடுக்கும் நம்பிக்கையில்.
அந்த கவிதையின் முதல் வரியை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தேடல், Pada: 6:36 AM