Good Days

அவமானம்

https://good-d4ys.blogspot.com/2010/10/blog-post_6826.html



அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி . செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.



அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.



எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.



கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”


“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”
அவமானம், Pada: 5:42 AM
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved